ஆய்வு உதவித்தொகை

 

செம்மொழித் தமிழில் முனைவர் பட்டமும் முனைவர் பட்ட மேலாய்வும் மேற்கொள்வோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழந்தமிழ் நூல்களில் ஆய்வை ஊக்கப்படுத்தும் நோக்கில் இளம் ஆய்வாளர்களுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுகிறது

முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை

தமிழ் இலக்கணம், இலக்கியம், மொழியியல், அல்லது அதனோடு தொடர்புடைய மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்பொருளியல், கல்வெட்டியல், தத்துவவியல் ஆகிய பாடங்களில் (ஏதேனும் ஒன்று) முதல் வகுப்பு அல்லது உயர் இரண்டாம் வகுப்புப் பெற்ற முதுகலைப் பட்டதாரிகள் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். பல்கலைக்கழக நல்கைக்குழுவின் விதிமுறைப்படி ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் 5% தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த பல்கலைக்கழகத்திலோ / ஆய்வு நிறுவனத்திலோ முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்திருப்பவராகவோ / பதிவு செய்ய இருப்பவராகவோ இருப்பின் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஆய்வு உதவித்தொகை பெறுவதற்கு 30 வயதிற்குட்பட்டவர்களே தேர்வுசெய்யப்படுவர். எனினும் வயது வரம்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளும் ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை திங்கள் ஒன்றுக்கு உரூபாய் 12,000 /- என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அத்துடன் தொடர்புடைய சிறு செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு உரூபாய் 12,000 /- வரை வழங்கப்படும்.
ஆய்வாளரின் ஆய்வுப்பணியை மதிப்பிட்ட பின்னர்த் தேவையிருப்பின் இவ்வுதவித்தொகை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எவ்வாறாயினும் உதவித்தொகையின் கால எல்லை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது.

முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகை

இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், கல்வெட்டியல், தொல்பொருளியல், மெய்யியல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும். ஆய்வு உதவித்தொகை பெறுவதற்கு நாற்பது வயதிற்குட்பட்டவர்களே தேர்வு செய்யப்பெறுவர். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் விதிமுறைப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு மூன்று ஆண்டுகளும் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தவர்க்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

முனைவர் பட்டம் பெற்றவர்கள் மேலாய்வு நிகழ்த்துவதற்குத் திங்கள் ஒன்றுக்கு ரூபாய் 18,000/- என இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஆய்வுத் தொடர்புடைய பிற செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 30,000/- வழங்கப்படும்.

ஆய்வாளரின் பணியை முறையாக மதிப்பீடு செய்தபின் தேவையிருப்பின் உதவித்தொகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும். எவ்வாறாயினும் உதவித்தொகையின் கால எல்லை மூன்று ஆண்டுகளேயாகும். அந்த வகையில் 2006ஆம் ஆண்டு முதல் செம்மொழித் தமிழில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த 297 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் 44 முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுவாரியாக உதவித்தொகை வழங்கப்பட்ட விவரம்:

ஆண்டு முனைவர் பட்டம் முனைவர் பட்ட மேலாய்வு
2006-07 10 2
2007-08 10 5
2008-09 10 5
2009-10 26 7
2010-11 17 3
2011-12 34 3
2012-13 28 3
2013-14 32 2
2014-15 29 5
2015-16 23 3
2016-17 39 2
2017-18 39 4
மொத்தம் 297 44