கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து அமைக்கப்பெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையின் மூலமாக ஒவ்வோராண்டும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகும்.

பத்து இலட்சம் (ரூ.10,00,000) விருதுத் தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்.

ஒவ்வோராண்டும் இந்த விருது அறக்கட்டளையை நிறுவிய கலைஞரின் பிறந்த நாளான சூன் 3 அன்று வழங்கப்படும்

செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். இப்பங்களிப்பு பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைய வேண்டும்.

கீழ்க்காணும் துறைகளில் மேற்கொண்ட ஆய்வாக அது அமையலாம்:

1. தொல்லியல் 6. இலக்கியத் திறனாய்வு
2. கல்வெட்டியல் 7. படைப்பிலக்கியம்
3. நாணயவியல் 8. மொழிபெயர்ப்பு
4. இலக்கிய ஆய்வு 9. இசை, நடனம், ஓவியம் மற்றும் சிற்பம்
5. மொழியியல் ஆய்வு

தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலிற்காக அல்லது ஒர் அறிஞரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படும்.

விருது பெறும் அறிஞர் எந்நாட்டினைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; விருது பெறும் நூல் அறிவுலகைக் கவர்ந்த பெருமையுடையதாயின் எந்த மொழியிலும் இருக்கலாம்.

இதுவரையில் 11 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுவாரியாக விருதுபெற்றோர் விவரம் கீழ்வருமாறு:

வ.எண் அறிஞர் பெயர் ஆண்டு
1 பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா 2009
2 முனைவர் வீ.எஸ். ராஜம் 2010
3 பேராசிரியர் பொன். கோதண்டராமன் 2011
4 பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி 2012
5 பேராசிரியர் ப. மருதநாயகம் 2013
6 பேராசிரியர் கு. மோகனராசு 2014
7 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 2015
8 பேராசிரியர் கா. ராஜன் 2016
9 பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் 2017
10 கவிஞர் ஈரோடு தமிழன்பன் 2018
11 பேராசிரியர் கு. சிவமணி 2019
12 முனைவர் ம. இராசேந்திரன் 2020
13 முனைவர் க. நெடுஞ்செழியன் 2021
14 முனைவர் ழான் லூய்க் செவ்வியார் 2022
15 பேராசிரியர் க. இராமசாமி 2023