முதன்மைத் திட்டங்கள்

நிறுவனத் திட்டங்களும் செயற்பாடுகளும் (அறிமுகம்)

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மேற்கண்ட 41 செவ்வியல் நூல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

  • பல்துறை சார்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆராய்தல்
  • தமிழ்மொழி பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆராய்தல்
  • பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை வெளிப்படுத்துதல்
  • இணையவழிச் செம்மொழித் தமிழைக் கற்பித்தல்
  • திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வையும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வையும் மேற்கொள்ளுதல்
  • உலக அளவில் தமிழாய்வுக் களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களையும் தமிழாய்வில் ஈடுபடச் செய்தல்
  • பழந்தமிழ் நூல்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதியுதவி வழங்குதல்
  • தமிழாய்வில் சிறந்துவிளங்கும் நிறுவனங்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத் திட்டங்களுக்காக நிதியுதவி வழங்குதல்
  • செம்மொழித் தமிழாய்வில் சிறப்பான பங்களிப்பு நல்கியோர்களுக்கு விருது வழங்குதல்

முதலான பல்வேறு செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்திச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயலாற்றி வருகிறது. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் பத்து முதன்மைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு

தொன்மைக் காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான 41 செவ்வியல் நூல்களையும் மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரைமேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலமாக இதுவரையில் இறையனார் களவியலுரை, ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி) ஆகிய நூல்களுக்கான செம்பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பழந்தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்பு

41 செவ்வியல் நூல்களையும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பில் தமிழ் மூலம், அதன் ஒலிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு, கலைச்சொல் அகரமுதலி, முதற்குறிப்பகராதி ஆகியவை இடம்பெறும். இத்திட்டத்தின் வாயிலாகத் திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு செவ்வியல் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கணம்

செம்மொழித் தமிழின் தொன்மையையும் பழம்பெருமையையும் நிலைநிறுத்துவதற்கு வரலாற்று முறையில் தமிழ் இலக்கணத்தை ஆய்வு செய்தல் இன்றியமையாததாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முறையில் தமிழ் இலக்கணம் எழுதப்பட்டுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூலாக வெளியிடப்படும். வரலாற்று முறையில் இலக்கணம் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் செய்திகள் தொகுக்கப்பெறும் பொழுது இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மொழிநடைகளும் கருத்தில் கொள்ளப்பெறும். இவ்வாய்வு பழந்தமிழ் இலக்கியக் காலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய மூன்று காலப் பகுப்புகளைக் கொண்டிருக்கும்.

தமிழின் தொன்மை – ஒரு பன்முக ஆய்வு

தமிழ்ச் செவ்வியல் நூல்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாட்டுக் கூறுகளையும், வாழ்க்கை முறைகளையும் வெளிக்கொணரும் வகையில் பன்முக ஆய்வுகளை நிகழ்த்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழின் பன்முக ஆய்வுகளை நிகழ்த்துவதுடன் ஆய்விற்குத் துணையாக விளங்கும் கருவிநூல்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ் வழக்காற்றாய்வு

வட்டாரம், தொழில், இனம் சார்ந்த தமிழ் வழக்காறுகளை வரலாற்றுமுறையில் தொகுத்து வகைப்படுத்தி அகராதி உருவாக்குதல் இத்திட்டத்தின் மைய நோக்கமாகும். சமகால வட்டார வழக்குகளைச் செவ்வியல் இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழர்களின் நெல்வகைகள், ஆடுமாடு வகைகளுக்கு வட்டாரம் சார்ந்த சொல் வழக்குகள் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழும் பிறமொழிகளும்

தமிழ் மொழியை இலக்கியம், மொழியியல், பண்பாடு ஆகிய கூறுகளின் நோக்கில் பிற மொழிக் குடும்பங்களோடு ஒப்பிட்டு ஆராய்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும். உலகளாவிய மொழிக் குடும்பங்களோடும், ஒவ்வொரு மொழிக் குடும்ப மக்களின் வாழ்க்கை முறையோடும் தமிழின் கூறுகளைக் ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பழந்தமிழ் ஆய்விற்கான மின்நூலகம்

அரிய ஓலைச் சுவடிகள், தாட்சுவடிகள், அரிய அச்சு நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு செய்வது திட்டத்தின் நோக்கமாகும். உலகளாவிய தமிழ் ஆய்வாளர்கள் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் செம்மொழி நிறுவன வெளியீடுகள் வடிவமைக்கப்பட்டு இத்திட்டத்தின் வாயிலாக வெளியிடப்படும்.

இணையவழிச் செம்மொழிக் கல்வி

தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பயின்றுவரும் மொழியாட்சியைப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், நயம்பாராட்டுதல் ஆகிய திறன்களைக் கற்போர் அடைய உதவுதல் என்பதனை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்

செவ்வியல் நூல்களுக்கான தரவகம் உருவாக்குதல், இலக்கண, இலக்கியக் கல்வி, இயற்கை மொழி ஆகியவற்றிற்குப் பயன்படும் மென்பொருள்களை உருவாக்குதல் என்பதனை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.