நிறுவன அறிமுகம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நடுவண் அரசின் கல்வி அமைச்சக மொழிப் பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். 2004ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்த பின்னர் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்மொழி மேம்பாட்டுக்கான மையத் திட்டம் (Central Plan Scheme for Classical Tamil) ஒன்று நடுவண் அரசால் அமைக்கப்பெற்று மைசூரில் உள்ள இந்திய
மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் (CIIL) ஒப்படைக்கப்பட்டது. அதனால் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது.
2008ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படத் தொடங்கியது. 2009 சனவரி 21 அன்று தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் (1975) 27 பிரிவு 10இன் கீழ் செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது (பதிவு எண். 1/2009).
2012ஆம் ஆண்டு மே மாதம் வரை பாலாறு இல்லத்தில் இயங்கி வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இடமாற்றம் செய்யப்பட்டு, தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தற்பொழுது சென்னைப் பெரும்பாக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பாரதப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட (12.01.2022). புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.
கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.